3:43. ''மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜுது செய்தும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக'' (என்றும்) கூறினர்.
3:44. (நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்;. மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
3:45. மலக்குகள் கூறினார்கள்; ''மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;.
3:46. ''மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.''
3:47. (அச்சமயம் மர்யம்) கூறினார்; ''என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?'' (அதற்கு) அவன் கூறினான்; ''அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.''
3:48. இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.
3:49. இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்;) ''நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது'' (என்று கூறினார்).
3:50. ''எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்;, ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.''
3:51. ''நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான விழியாகும்.''
3:52. அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, ''அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?'' என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்; ''நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்'' எனக் கூறினர்.
3:53. ''எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!'' (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.)
3:54. (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான்;. தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
3:55. ''ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;. பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்'' என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
3:56. எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன்;. அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.
3:57. ஆனால், எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்கு நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்.
3:58. (நபியே!) நாம் உம் மீது ஓதிக்காட்டிய இவை (நற்சான்றுகளைக் கொண்ட) இறை வசனங்களாகவும்;, ஞானம் நிரம்பிய நற்செய்தியாகவும் இருக்கின்றன.
3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் ''குன்'' (ஆகுக) எனக் கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
3:60. (நபியே! ஈஸாவைப் பற்றி) உம் இறைவனிடமிருந்து வந்ததே உண்மையாகும்;. எனவே (இதைக் குறித்து) ஐயப்படுவோரில் நீரும் ஒருவராகிடாதீர்.
3:61. (நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்; ''வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) 'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' என்று நாம் பிரார்த்திப்போம்!'' என நீர் கூறும்.
3:62. நிச்சயமாக இதுதான் உண்மையான வரலாறு. அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் - அவன் யாவரையும் மிகைத்தோன்; மிக்க ஞானமுடையோன்.
3:63. அவர்கள் புறக்கணித்தால் - திடமாக அல்லாஹ் (இவ்வாறு) குழப்பம் செய்வோரை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
3:64. (நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்;. அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்'' எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள்.
4:156. இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்).
4:157. இன்னும், ''நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்'' என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
4:158. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
4:159. வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை. ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.
4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல் மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;. இன்னும் (''குன்'' ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான்;. (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்;. ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்;. (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்;. அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
4:172. (ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய்) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களோ, அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான்.
அல்குர்ஆன்