Friday, December 30, 2011

ஏசுநாதருக்கு உண்மையில் இறைமையின் சிறப்பியல்புகள் ஏதேனும் உள்ளதா? இல்லை! இல்லவே இல்லை! கவனியுங்கள் இறுதி இறைவேத வசனங்களை!

5:116. இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே (ஏசு நாதர்) 'அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் (தீர்ப்பு நாளில்) கேட்கும் போது அவர், "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறி இருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றை எல்லாம் நன்கு அறிபவன்" என்று அவர் கூறுவார்.

5:117. "நீ எனக்கு கட்டளை இட்டப்படி (மனிதர்களை நோக்கி), 'என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்' என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களுக்கு கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்" (என்றும்);

5:118. "(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர். அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீதான் (யாவரையும்) மிகைத்தோனாகவும், ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்" (என்றும் கூறுவார்).

5:119. அப்போது அல்லாஹ், " இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும்.

5:120. வானங்களுடையவும், பூமியுனுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனே எல்லாப் பொருட்கள் மீது பேராற்றலுடையோன் ஆவான்.

அல் குர்ஆன்: சூரா அல் மாயிதா (உணவுத் தட்டு)

Friday, December 23, 2011

தங்கள் மார்க்கத்தை வீணாகவும் விளையாட்டாகவும் ஆக்கி, உலக வாழ்வில் மயங்கியோர் பெரும் இழப்புக்குள்ளாகும் நாள்!

சுவர்க்க வாசிகள், நரகவாசிகளை அழைத்து, எங்களுக்கு எங்கள் இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை நிச்சயமாகவும், உறுதியாகவும் பெற்றுக் கொண்டோம். உங்களுக்கு உங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டீர்களா?" என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், "ஆம் (பெற்று கொண்டோம்)" என்பார்கள். அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர், "அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!" என்று அறிவிப்பார்.

(ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் (நேர்) வழியைவிட்டு (மனிதர்களைத்) தடுத்து, அதைக் கோணலாக்கவும் விரும்பினர். மேலும் அவர்கள் இறுதி நாளையையும் (நம்பாது) மறுத்தனர்.

(நரகவாசிகள், சுவர்க்கவாசிகள் ஆகிய) இவர்களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும். அதன் சிகரங்களில் அனேக மனிதர்கள் இருப்பார்கள். (நரகவாசிகள், சுவர்க்கவாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள். அவர்கள் சுவர்க்க வாசிகளை அழைத்து "ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகுக!)" என்று கூறுவார்கள். அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை-அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கிறார்கள்.

அவர்களுடைய பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், அவர்கள், "எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே ஆக்கி விடாதே" என்று கூறுவார்கள்.

சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை-அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு- அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்; "நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!"

"அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் இவர்கள் தானே? (என்று சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள்; உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்" என்றும் கூறுவார்கள்.


நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, "தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்" எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்; நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் (நிராகரிப்பவர்கள்) மீது தடுத்து (ஹராம்-அனுமதியில்லை) விட்டான்" என்றும் கூறுவார்கள்.

(ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்; இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது; எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.

நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்தோம். அதை நாம் பூரண ஞானத்தைக் கொண்டு விளக்கியுள்ளோம்; அது நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.

இவர்கள் ( தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த) இறுதியையன்றி வேறு எதையும் எதிர்பார்க்கிறார்களா? அந்தத் தண்டணை நாள் வந்த போது, இதற்குமுன் அதனை முற்றிலும் மறந்திருந்த இவர்கள், "நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் சத்திய(வேத)த்தையே கொண்டு வந்தனர், எங்களுக்குப் பரிந்து பேசகூடியவர்கள் எவரும் இருக்கின்றனரா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்காகப் பரிந்து பேசட்டும்; அல்லது நாங்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா? அப்படியாயின், நாங்கள் முன் செய்து கொண்டிருந்த(தீய)வற்றை விட்டு வேறு (நன்மைகளையே) செய்வோம்" என்று கூறுவார்கள் - நிச்சயமாக அவர்கள் தமக்கு தாமே இழப்புக்கு ஆளாக்கிக் கொண்டார்கள், அவர்கள் கற்பனை செய்து வந்தவை அவர்களை விட்டும் மறைந்து விடும்.

அல் குர்ஆன்: 7-44 முதல் 53 வரை.

Friday, July 22, 2011

இறைவனின் மிகப்பெரும் படைப்புகளான சந்திரன், சூரியன், நட்சத்திரங்களை வணங்குவது மிகப்பெரும் வழிகேடு!

6:74. இப்ராஹீம் தம் தகப்பனார் ஆஜரிடம், "விக்கிரகங்களையா நீர் தெய்வங்களாக எடுத்துக் கொள்கிறீர்? நான் உம்மையும் உம் சமூகத்தாரையும், பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை நிச்சயமாகப் பார்க்கிறேன்" என்று கூறியதை நினைத்துப்பாரும்.

6:75. அவர் உறுதியான நம்பிக்கையுடையவராய் ஆகும் பொருட்டு வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியை இப்ராஹீமுக்கு இவ்வாறு காண்பித்தோம்.

6:76. ஆகவே அவரை இரவு மூடிக் கொண்ட போது அவர் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தார்; "இதுதான் என் இறைவன்!" என்று கூறினார்; ஆனால் அது மறைந்த போது அவர், "நான் மறையக் கூடியவற்றை நேசிக்க மாட்டேன்" என்று சொன்னார்.

6:77. பின்னர் சந்திரன் (பிரகாசத்துடன்) உதயமாவதைக் கண்டு, அவர், "இதுவே என் இறைவன்" என்று கூறினார். ஆனால் அது மறைந்த போது அவர், "என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான் நிச்சயமாக வழி தவறியவர்கள் கூட்டத்தில் (ஒருவனாக) ஆகிவிடுவேன்" என்று கூறினார்.

6:78. பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்ட போது: "இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது" என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், "என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்" என்று கூறினார்.

6:79. "வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக - (இணைவைப்போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்" (என்று கூறினார்).

6:80. அவருடன் அவருடைய கூட்டத்தார் விவாதித்தார்கள்; அதற்கவர் "அல்லாஹ்வைப் பற்றியா என்னிடம் தர்க்கம் செய்கிறீர்கள்? அவன் நிச்சயமாக எனக்கு நேர்வழி காட்டி விட்டான்; நீங்கள் அவனுக்கு இணையாக்குபவற்றைப் பற்றி நான் பயப்பட மாட்டேன்; என் இறைவன் எதையாவது நாடினாலன்றி (எதுவும் நிகழ்ந்து விடாது); என் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்; இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?" என்று கூறினார்.

6:81. உங்களுக்கு அவன் எந்த அத்தாட்சியும் இறக்கி வைக்காமலிருக்கும்போது நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது பற்றி பயப்படவில்லை - அப்படியிருக்க நீங்கள் (அவனுக்கு) இணைவைப்பவற்றுக்கு நான் எப்படி பயப்படுவேன்? நம் இருபிரிவினரில் அச்சமின்றி இருக்கத்தகுதி உடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், (கூறுங்கள் எனவும் கேட்டார்).

6:82. எவர் ஈமான் (நம்பிக்கை) கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்த வில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியை பெற்றுக் கொண்டவர்கள்.

6:83. இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்ராஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன்.

அல் குர்ஆன்: அல் அன்ஆம்.

Friday, April 01, 2011

மனிதன் அல்லாஹ்வின் மீது கற்பனையாக இட்டுக்கட்டி வர்ணிப்பதெல்லாம் அவனுக்கே கேடாக ஆகி விடுகிறது!

21:11. மேலும், அநியாயக்கார(ர்கள் வாழ்ந்த) ஊர்கள் எத்தனையையோ நாம் அழித்தோம்: அதற்குப் பின் (அங்கு) வேறு சமுதாயத்தை உண்டாக்கினோம்.

21:12. ஆகவே, அவர்கள் நமது வேதனை (வருவதை) உணர்ந்தபோது, அவர்கள் அங்கிருந்து விரைந்தோடலானார்கள்.

21:13. "விரைந்து ஓடாதீர்கள், நீங்கள் அனுபவித்த சுக போகங்களுக்கும்,உங்கள் வீடுகளுக்கும் திரும்பி வாருங்கள்; (அவை பற்றி) நீங்கள் கேள்வி கேட்கப்படுவதற்காக" (என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது)

21:14. (இதற்கு அவர்கள்) "எங்கள் கேடே! நாங்கள் நிச்சயமாக அநியாயக்காரர்களாக இருந்தோம்" என்று வருந்திக் கூறினார்கள்.

21:15. அறுவடை செய்யப்பட்ட வயலின் அரிதாள்கள் எரிந்தளிவது போன்று அவர்களை நாம் ஆக்கும் வரை அவர்களுடைய இக்கூப்பாடு ஓயவில்லை.

21:16. மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்கவில்லை.

21:17. வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்து கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம்.

21:18. அவ்வாறில்லை! நாம் சத்தியத்தைகொண்டு, அசத்தித்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்து விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.

அல்குர்ஆன்: அல் அன்பியா - நபிமார்கள்.

Thursday, January 06, 2011

உலகில் மனிதன் புரியும் பாவங்களிலேயே மிகப்பெரியது, அல்லாஹ்வுக்கு இணை வைத்தலே!

“ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் தூதர்களை அனுப்பி இருக்கிறோம்। (அத்தூதர்கள் அச்சமுகத்தவர்களிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள் (ஷைத்தான்களாகிய) தாகூத்துகளிடமிருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.” (அந்நஹ்ல்: 36)

“உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம்முடைய தூதர்களிடம் அர்ரஹ்மானையன்றி வணங்கப்படும் வேறு தெய்வங்களை நாம் ஆக்கியிருந்தோமா? என்று கேட்பீராக!.” (அல்ஜுக்ருஃப்: 45)

“எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அப்பொழுது அவன் வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனைக் கொத்திக்கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்)காற்று அவனை வெகுதூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துச் சென்றதைப் போன்றோ இருக்கின்றான்.” (அல்ஹஜ்: 31)

“நிச்சயமாக அல்லாஹ் இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான்.” (அந்நிஸா: 48)

“மனிதர்களே! நீங்கள் உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம்.’ (அல்பகரா: 21)

மேலும் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை ஆக்காதீர்கள். நிச்சயமாக நான் அவனிடமிருந்து உங்களுக்கு தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்தான்.” (அத்தாரிஆத்: 51)

”என்னுடைய சமூகத்தவர்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனன்றி உங்களுக்கு வேறு கடவுள் இல்லை.” (அல்அஃராஃப்: 59)

மேலும், “நிச்சயமாக என்னைத்தவிர வேறு இறைவன் இல்லை. எனவே என்னையே நீங்கள் வணங்க வேண்டும் என்று நாம் வஹீ அறிவிக்காமல் உமக்கு முன்னர் எந்த நபியையும் நாம் அனுப்பவில்லை.” (அல்அன்பியா: 25)

“இன்னும் அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை அழைக்க மாட்டார்கள்.” (அல்புர்ஃகான்: 68)

(அல்லாஹ்வையாகிய) எனக்கு யாதொன்றையும் இணையாக்காது என்னையே வணங்குவார்கள்.” (அந்நூர்: 55)

“நீர் இணை வைத்தால் நிச்சயமாக உம்முடைய செயல்கள் யாவும் அழிந்து விடும். நிச்சயமாக நீர் நஷ்டமடைந்தவர்களில் ஆகி விடுவீர் என உமக்கும் உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் (வஹீ) அறிவிக்கப்பட்டது. ஆகவே நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும் அவனுக்கு நன்றி செலுத்துவோரில் நீர் ஆகி விடுவீராக!.” (அல்ஜுமர்: 65-66)

”அல்லாஹ்வையே வணங்க வேண்டும். அவனுக்கு யாதொன்றையும் நான் இணையாக்கக் கூடாது என்றும், அவன் பக்கமே (உங்களை) நான் அழைக்கிறேன். இன்னும் அவன் பக்கமே மீட்சியும் இருக்கிறது.” (அர்ரஃது: 36)

“இன்னும் உமது இரட்சகன் பக்கம் நீர் அழைப்பீராக! நிச்சயமாக நீர் இணை வைப்போரில் ஒருவராக ஆகி விட வேண்டாம்,” (அல்கஸஸ்: 87)

“உமது இரட்சகனால் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக! அவனைத்தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறு இல்லை. இன்னும் இணை வைப்போரை நீர் புறக்கணித்து விடும்.” (அன்ஆம்: 106)

இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறியதை அல்லாஹ் கூறுகிறான்: “மேலும் என்னையும் என் மக்களையும் சிலைகளை வணங்குவதிலிருந்து தூரப்படுத்துவாயாக என்றும், என் இரட்சகனே! நிச்சயமாக (இந்த சிலைகள்) மனிதர்களில் அநேகரை வழிகெடுத்து விட்டன.” (இப்ராஹீம்: 35-36)

“எனவே அல்லாஹ்வுடன் வேறோர் நாயனை நீர் அழைக்காதீர். (அவ்வாறு அழைத்தால்) அதனால் நீர் வேதனை செய்யப்படுபவர்களில் ஆகி விடுவீர். இன்னும் நீர் உம்முடைய நெருங்கிய உறவினர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக.” (அஷ்ஷுஅரா: 213-214)