Friday, November 02, 2007

பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு நிகரானவனை நீர் அறிவீரா?

2:164. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.

6:96. அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும்.

19:65. "(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான். ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?"

13:13. மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸபீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்.

37:12. (நபியே! அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) நீர் ஆச்சரியப்படுகிறீர்; (ஆனால்) அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.

39:67. "அல்லாஹ்வின் மேலான தகுதிக்குத் தக்கவாறு அவனை அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. இன்னும் மறுமை நாளில் பூமி முழுவதும் அவனுடைய ஒரு கைப்பிடியிலும், வானங்கள் சுருட்டப்பட்டு அவனுடைய வலக்கரத்திலும் இருக்கும். அவர்கள் இணை வைப்பதை விட்டும் அவன் மிக்க மேலானவன். மிகப் பரிசுத்தமானவன்".