62:9-10. இறை நம்பிக்கை கொண்டவர்களே! வெள்ளிக் கிழமையன்று தொழுகைக்காக அழைக்கப்படும் போது அல்லாஹ்வை நினைவு கூர்வதன் பக்கம் விரைந்து செல்லுங்கள். கொடுக்கல் - வாங்கலை* விட்டு விடுங்கள். இது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்! பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் பூமியில் பரவிச் செல்லுங்கள். அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்!** மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கக் கூடும்.***
அல் குர்ஆன்: அல் ஜும்ஆ.
*இந்தக் கட்டளையில் 'திக்ரு' என்பது சொற்பொழிவைக் குறிக்கின்றது. ஏனெனில், பாங்கு சொன்ன பிறகு அண்ணலார் (ஸல்) செய்து வந்த முதல் செயல் தொழுகையாக இருக்கவில்லை. மாறாக சொற்பொழிவாகவே இருந்தது. எப்போதும் சொற்பொழிவுக்குப் பிறகுதான் அண்ணலார் (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றி வந்தார்கள். 'அல்லாஹ்வை நினைவு கூர்வதன் பக்கம் விரைந்து செல்லுங்கள்' என்னும் வாசகத்தின் கருத்து, "ஓடி வாருங்கள்" என்பதல்ல. மாறாக, "முடிந்த வரை வெகு விரைவாக அங்கு சென்றடைய முயலுங்கள்!" என்பதேயாகும். "கொடுக்கல் - வாங்கலை விட்டு விடுங்கள்" என்பதன் பொருள், கொடுக்கல் - வாங்கலை விட்டுவிடுவதன்று. மாறாக தொழுகைக்கு செல்ல வேண்டும் எனும் அக்கறை, முனைப்பு ஆகியவற்றைத் தவிர வேறெல்லாப் பணிகளையும் ஈடுபாடுகளையும் விட்டு விடுவதாகும். ஜும்ஆ பாங்குக்குப் பிறகு வியாபாரம் மற்றும் அனைத்து விதமான கொடுக்கல் - வாங்கலும் விலக்கப்பட்ட செயல்களாகும் என்று இஸ்லாத்தின் சட்ட நிபுணர்கள் ஒருமித்த கருத்துக் கொண்டுள்ளனர். ஆனால் நபி மொழியின்படி குழந்தைகள், பெண்கள், அடிமைகள், நோயாளிகள், பயணிகள் ஆகியோருக்கு ஜும்ஆவின் கடமையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
**இதன் பொருள் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பூமியில் பரவிச் செல்வதும் வாழ்க்கைத் தேவைகளை தேடுவதில் முழுமையாக ஈடுபடுவதும் கட்டாயம் என்பதல்ல. மாறாக, இந்தக் கட்டளை 'இதற்கான அனுமதியுண்டு' எனும் கருத்தில் அளிக்கப்பட்டதாகும். ஏனெனில், ஜும்ஆவின் பாங்கினைக் கேட்டு எல்லா வியாபாரத்தையும் விட்டு விடும்படி கட்டளையிடப்பட்டிருந்தது. எனவே, தொழுகை பரவிச் சென்று, நீங்கள் உங்களுடைய எந்த வியாபாரத்தைச் செய்ய விரும்புகிறீர்களோ அதனைச் செய்யுங்கள்; அதற்கு உங்களுக்கு அனுமதி இருக்கிறது என்று கூறப்பட்டது. இது 5:2-இல் கூறப்பட்டுள்ள கட்டளையைப் போன்றதாகும். அதில் 'இஹ்ராமுடைய' நிலையில் வேட்டையாடுவதைத் தடை செய்த பின்னர், "நீங்கள் இஹ்ராமை களைந்து விட்டால் வேட்டையாடுங்கள்" என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் கருத்து, கட்டாயம் வேட்டையாடுங்கள் என்பதல்ல. மாறாக, இதற்குப்பின் நீங்கள் வேட்டையாடலாம் என்பதாகும். எனவே, எவர்கள் இந்த வசனத்தின் வாயிலாக, திருக்குர்ஆனின்படி, 'இஸ்லாத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை நால் அல்ல' என்று ஆதாரம் கூறுகிறார்களோ அவர்கள் தவறாகக் கூறுகின்றார்கள். வாரத்தில் ஒருநாள் விடுமுறை வேண்டும் என்றால், யூதர்கள் சனிக்கிழமையையும், கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையையும் விடுமுறை நாளாக்கிக் கொண்டிருப்பதைப்போல் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமையை விடுமுறை நாளாக கொள்ள வேண்டும்.
***இது போன்ற இடங்களில் 'கூடும்' என்னும் சொல்லைக் கையாள்வதின் கருத்து அல்லாஹ்வுக்கு ஐயமேதும் இருக்கின்றது என்பதல்ல. (இத்தகைய எண்ணம் கொள்வதிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!) மாறாக, இது உண்மையில் இராஜகம்பீரப் பாணியாகும். ஓர் இரக்கமுள்ள எஜமானன் தன் பணியாளனிடம் "நீர் இன்ன பணியை ஆற்றும்; உமக்கு முன்னேற்றம் கிட்டக்கூடும்" என்று கூறுவதைப் போன்றதாகும் இது! இதில் நுட்பமானதொரு வாக்குறுதி மறைந்துள்ளது. அதனைப் பெறுகின்ற ஆவலில் அப்பணியாளன் மனப்பூர்வமாக மிகுந்த ஆர்வத்துடன் அப்பணியை நிறைவேற்றுகின்றான்.