Tuesday, July 05, 2005

நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.

6:130. (மறுமை நாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி) "ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை (அறிவித்து) ஓதிக்காட்டவும், இந்த நாளில் ஏற்படப்போகும் சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா?" (என்று கேட்பான்), அதற்கு அவர்கள், "நாங்களே எங்கள் (பாவத்தின்) மீது சாட்சி கூறுகிறோம்" என்று கூறுவார்கள்; இதற்குக்காரணம் உலக வாழ்க்கை அவர்களை மயக்கி விட்டது - அவர்கள் காஃபிர்களாக இருந்ததாக அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள்

6:131. (இவ்வாறு தூதர்களை அவன் அனுப்பியதற்குக்) காரணம் யாதெனில், அநியாயம் செய்பவர்களின் ஊரை, அதிலிருப்போர் எச்சரிக்கை இல்லாதிருக்கும் நிலையில் அவர்கள் செய்து விட்ட அநியாயத்தின் காரணமாக உம் இறைவன் அழிப்பதில்லை என்பதேயாகும்.

6:132. ஒவ்வொருவருக்கும் அவர்கள் நடந்து கொண்டதற்குத் தக்கவாறு உயர்நிலைகள் உண்டு; உம் இறைவன் அவர்கள் செய்வதைப் பற்றி பாராமுகமாக இல்லை.

6:133. உம் இறைவன் தேவைகளற்றவன்; மிக்க கருணையுடையவன் - அவன் நாடினால் உங்களைப்போக்கி உங்களுக்குப் பிறகு, உங்களை அவன் இதர மக்களின் சந்ததியிலிருந்து உற்பத்தி செய்தது போன்றே - தான் நாடியவரை உங்களுக்கு பதிலாக ஆக்கி விடுவான்.

6:134. நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது (கியாமத் - இறுதி நாள்) வந்து விடும். (அதை) நீங்கள் தடுத்து விட முடியாது.

6:135. (நபியே!) நீர் கூறும்: "என்னுடைய கூட்டத்தாரே! நீங்கள் உங்கள் நிலைமைக் கொப்ப காரியங்களைச் செய்து கொண்டிருங்கள்; நானும் (காரியங்கள்) செய்து கொண்டிருப்பவனே; அப்பால், இவ்வுலகத்தின் இறுதி முடிவு யாருக்கு நலமாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் - நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.

அல் குர்ஆன்: அல் அன்ஆம் (கால்நடைகள்)