Thursday, March 03, 2005

மனிதனில் தராதரங்கள் ஏன்?


43:26. இப்ராஹீம் தம் தந்தையையும், தம் சமூகத்தவர்களையும் நோக்கி: "நிச்சயமாக நான், நீங்கள் வழிபடுபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன்" என்று கூறியதையும்;

43:27. "என்னைப் படைத்தானே அவனைத் தவிர (வேறெவரையும் வணங்க மாட்டேன்) . அவனே எனக்கு நேர்வழி காண்பிப்பான்" (என்று கூறியதையும் நினைவு கூறுவீராக)!

43:28. இன்னும், தம் சந்ததியினர் (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி வரும் பொருட்டு (இப்ராஹீம் தவ்ஹீதை) அவர்களிடம் ஒரு நிலையான வாக்காக ஏற்படுத்தினார்.

43:29. எனினும், இவர்களிடம் உண்மையும், தெளிவான தூதரும் வரும் வரையில், இவர்களையும், இவர்களுடைய மூதாதையரையும் சுகமனுபவிக்க விட்டு வைத்தேன்.

43:30. ஆனால், உண்மை (வேதம்) அவர்களிடம் வந்த போது "இது சூனியமே தான்; நிச்சயமாக நாங்கள் இதை நிராகரிக்கிறோம்" என்று அவர்கள் கூறினர்.

43:31. மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள (மக்கா, மதினா) பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக்கூடாதா?"

43:32. உம் இறைவனின் ரஹ்மத்தை (நல்லருளை) இவர்களா பங்கிடுகிறார்கள்? இவர்களுடைய உலகத் தேவைகளை இவர்களிடையே நாமே பங்கிட்டு இருக்கிறோம்." இவர்களில் சிலர், சிலரை ஊழியத்திற்கு வைத்துக் கொள்ளும் பொருட்டு, இவர்களில் சிலரை, சிலரை விட தரங்களில் நாம் உயர்த்தி இருக்கிறோம்; உம்முடைய இறைவனின் ரஹ்மத்து அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டிருப்பதை விட மேலானதாகும்.

43:33. நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்.

43:34. அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்).

43:35. தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்): ஆனால், இவையெல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வேறில்லை. ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தான்.

அல் குர்ஆன்: அஜ் ஜுக்ருஃப் (பொன் அலங்காரம்)