10:72. (நபி நூஹ் (அலை) தம் சமுதாயத்தை நோக்கி:) "நீங்கள் என்னைப் புறக்கணித்தால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை ஏனென்றால்) நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலியெல்லாம் அல்லாஹ்விடமேயன்றி மற்றெவரிடமுமில்லை. நான் முஸ்லிம்களில் இருக்குமாறே ஏவப்பட்டுள்ளேன்" என்று கூறினார்கள்.
2:131,132. தன்னைத் தானே மூடனாக்கிக் கொண்டவனைத் தவிர இப்ராஹீமுடைய இஸ்லாம் மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நிச்சயமாக நாம் அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம். மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களில் இருப்பார். அவருக்கு அவருடைய இறைவன் 'அஸ்லிம்' நீர் (எனக்கு முற்றிலும்) வழிப்படும் எனக்கூறிய சமயத்தில், அவர் (எவ்விதத் தயக்கமுமின்றி) 'அகிலமனைத்தின் இரட்சகனாகிய உனக்கு இதோ நான் இஸ்லாமாகி விட்டேன் (வழிப்பட்டேன்) என்று கூறினார்"
10:84. நபி மூஸா (அலை) (தம் சமூகத்தவரை நோக்கி) என்னுடைய சமூகத்தவரே! நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை விசுவாசித்து உண்மையாகவே நீங்கள் அவனுக்கு முற்றிலும் வழிப்படுகிறவர்களாக (முஸ்லிமாக) இருந்தால் அவனை முற்றிலும் நம்பி விடுங்கள். அவனிடமே உங்கள் காரியங்களை ஒப்படைத்து விடுங்கள் என்று கூறினார்கள்."
7:126. "(அன்றி) எங்களிடம் இறைவனின் அத்தாட்சிகள் வந்தபோது நாங்கள் அவனைக் கொண்டு விசுவாசம் கொண்ட (இந்தக் குற்றத்தைத்) தவிர வேறு எதற்கு எங்களிடமிருந்து பழிவாங்கப் போகிறாய் என்று ஃபிர்அவ்னை வினவி, 'இறைவா! எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக! உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக (முஸ்லிம்களாக) எங்களை ஆக்கி எங்களைக் கைப்பற்றுவாயாக' என்று (கூறி மனந்திருந்திய சூனியக்காரர்கள்) பிரார்த்தித்தார்கள்"
12:101. யூஸுஃப் நபி (அலை) 'இறைவா! நிச்சயமாக நீ எனக்கு ஒரு ஆட்சியை அருள் புரிந்தாய். கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு நீ கற்று தந்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தோனே! இம்மை, மறுமையில் என்னை இரட்சிப்பவன் நீயே! முற்றிலும் உனக்கு வழிப்பட்டவனாக (முஸ்லிமாக) என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்தில் என்னை சேர்த்து விடுவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்."
5:44. தௌராத்தையும் நிச்சயமாக நாம் தான் இறக்கி வைத்தோம். அதில் நேர்வழியும் இருக்கிறது பிரகாசமும் இருக்கிறது. அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டு (முஸ்லிமாக) நடந்த நபிமார்கள் அதனைக் கொண்டே யூதர்களுக்கு மார்க்கக் கட்டளையிட்டு வந்தார்கள்".
5:111. "அன்றி என்னையும் (அல்லாஹ்வையும்) என்னுடைய தூதரையும் (அதாவது உம்மையும்) (ஈஸா (அலை) விசுவாசிக்கும்படி அப்போஸ்தலர்கள் என்னும் உம் சிஷ்யர்களுக்கு நான் அறிவித்த சமயத்தில் அவர்கள் (அவ்வாறே) நாங்கள் விசுவாசித்தோம். நிச்சயமாக நாங்கள் முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களென்பதற்கு நீரே சாட்சியாக இருப்பீராக எனக் கூறியதையும் நினைத்துப் பாரும் (என அந்நாளில் கூறுவான்.)"