முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன். எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள். மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:135)
முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 5:8))
அன்றியும், இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்போராகவும், விலக்கப்பட்ட பொருட்களையே விழுங்குவோராகவும் இருக்கின்றனர். (நபியே!) இவர்கள் உம்மிடம் வந்தால், இவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும். அல்லது இவர்களைப் புறக்கணித்து விடும். அப்படி இவர்களை நீர் புறக்கணித்து விடுவீராயினும், இவர்கள் உமக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. ஆனால், நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான். (அல்குர்ஆன்: 5:42))
"(என்) சமூகத்தவர்களே! அளவையிலும் நிறுவையிலும், நீதியைக் கொண்டு நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். (மக்களுக்குக் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள். (அல்குர்ஆன்: 11:85)
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். (அல்குர்ஆன்: 16:90)
முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான். (அல்குர்ஆன்: 49:9)
நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம், அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம், இன்னும், இரும்பையும் படைத்தோம், அதில் கடும் அபாயமுமிருக்கிறது, எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்து) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன். (அல்குர்ஆன்: 57:25)