இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், "அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது, (உங்கள்)பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜக்காத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்" என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள். (அல்குர்ஆன்: 2:83)
"உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜக்காத்தை கொடுத்தும் வருவீர்களாக!" என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு "எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக, "இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது. நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்." (அல்குர்ஆன்: 4:77)
எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள். இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜக்காத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம். (அல்குர்ஆன்: 4:162)
நிச்சயமாக அல்லாஹ் இஸ்ராயீலின் சந்ததியினர் இடத்தில் உறுதி மொழி வாங்கினான்;. மேலும் அவர்களிலிருந்து பன்னிரண்டு தலைவர்களை அனுப்பியுள்ளோம். இன்னும் (உறுதி மொழி வாங்கியபோது) அல்லாஹ் கூறினான்; "நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன்; நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜக்காத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் தாழாலே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்;. எனவே இதற்குப் பின்னரும், உங்களில் எவரேனும் (இம்மார்க்கத்தை) நிராகரிப்பின் நிச்சயமாக அவர் நேரான வழியிலிருந்து தவறிவிட்டார்." (அல்குர்ஆன்: 5:12)
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜக்காத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர்வழி பெற்றவர்களில் ஆவார்கள். (அல்குர்ஆன்: 9:18)