Friday, March 27, 2009

அல்லாஹ்வின் அழைப்பு!

ِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ


அளவற்ற அருளாளன், (55:1)

இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான். (55:2)

அவனே மனிதனைப் படைத்தான். (55:3)

அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான். (55:4)

சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. (55:5)

(கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன. (55:6)

மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். (55:7)

நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக. (55:8)

ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலைநிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள். (55:9)

இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான். (55:10)

அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்- (55:11)

தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன. (55:12)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:13)

சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான். (55:14)

நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான். (55:15)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:16)

இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே, இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே. (55:17)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:18)

அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (55:19)

(ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது, அதை அவை மீறமாட்டா. (55:20)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:21)

அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன. (55:22)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:23)

அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன. (55:24)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:25)

(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே - (55:26)

மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும். (55:27)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:28)

வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும், (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர், ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான். (55:29)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:30)

இரு சாரார்களே! சீக்கிரமே நாம் உங்களுக்காக (கேள்வி கணக்குக் கேட்பதற்கு) அவகாசம் எடுப்போம். (55:31)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:32)

"மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது. (55:33)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:34)

(மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜீவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள். (55:35)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:36)

எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம்போலாகி) எண்ணெய் போலாகிவிடும். (55:37)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:38)

எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது. (55:39)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:40)

குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள் (55:41)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:42)

அன்று அவர்களிடம்; "இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்" (என்று கூறப்படும்). (55:43)

அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள். (55:44)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:45)

தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன. (55:46)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:47)

அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை. (55:48)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:49)

அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும். (55:50)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:51)

அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு. (55:52)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:53)

அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள், அவற்றின் உள் பாகங்கள் "இஸ்தப்ரக்" என்னும் பட்டினாலுள்ளவை, மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும். (55:54)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:55)

அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (55:56)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:57)

அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள். (55:58)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:59)

நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா? (55:60)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:61)

மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன. (55:62)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:63)

அவ்விரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை. (55:64)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:65)

அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும். (55:66)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:67)

அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு. (55:68)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:69)

அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர். (55:70)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:71)

ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர். (55:72)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:73)

அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (55:74)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:75)

(அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். (55:76)

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (55:77)

மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கியமுடையது. (55:78)

இவையனைத்தும் இறைமறை அல்குர்ஆனின் 55வது அத்தியாயத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரையுள்ள வசனங்களின் பொருளாகும்.