Friday, March 13, 2009

இறைநம்பிக்கைக் கொண்ட ஆணும், பெண்ணும்.....

ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும், நம்பிக்கையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும், வாய்மையாளர்களாகவும், பொறுமையுடையோராகவும், தானதர்மம் செய்பவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாப்பவர்களாகவும், இன்னும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருபவர்களாகவும் இருக்கின்றார்களோ திண்ணமாக அவர்களுக்காக அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான். (அல்குர்ஆன்: 33:35)

இறை நம்பிக்கை கொண்ட ஆண்கள் பெண்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கின்றார்கள். அவர்கள் நன்மை புரியுமாறு ஏவுகிறார்கள்: தீமையிலிருந்து தடுக்கிறார்கள். மேலும் தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்: ஜகாத்தும் கொடுக்கிறார்கள். மேலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகிறார்கள். அத்தகையோர் மீதுதான் அல்லாஹ்வின் கருணை பொழிந்து கொண்டிருக்கும். திண்ணமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன்: 9:71)

அவர்களுடைய அதிபதி அவர்களுக்கு இவ்வாறு மறுமொழி கூறினான் : உங்களில் எவருடைய நற்செயலையும் நான் வீணாக்கவே மாட்டேன் - அவர் ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி - நீங்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றிய (ஒரே இனத்த)வர்களே. (அல்குர்ஆன்: 3:195)

தீய செயல் புரிந்தவனுக்கு அவன் செய்த தீமைக்கேற்பவே கூலி கிடைக்கும். எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி - இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் பட்சத்தில் - அனைவரும் சுவனம் செல்வார்கள். அங்கு அவர்களுக்குக் கணக்கின்றி உணவு வழங்கப்படும். (அல்குர்ஆன்: 40:40)

ஆணாயினும் பெண்ணாயினும் எவர் இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில் நற்செயல் புரிகின்றாரோ அவரை (இவ்வுலகில்) தூய வாழ்வு வாழச் செய்வோம். (மறுமையிலும்) அத்தகையோர்க்கு அவர்களின் உன்னதமான செயல்களுக்கு ஏற்ப நாம் கூலி வழங்குவோம். (அல்குர்ஆன்: 16:97)