وَلَقَدْ آتَيْنَا إِبْرَاهِيمَ رُشْدَهُ مِن قَبْلُ وَكُنَّا بِه عَالِمِينَ
இன்னும், நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாக கொடுத்தோம் - அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். (21:51)
إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا هَذِهِ التَّمَاثِيلُ الَّتِي أَنتُمْ لَهَا عَاكِفُونَ
அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் "நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?" என்று கேட்ட போது (21:52)
قَالُوا وَجَدْنَا آبَاءنَا لَهَا عَابِدِينَ
அவர்கள், "எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள். (21:53)
قَالَ لَقَدْ كُنتُمْ أَنتُمْ وَآبَاؤُكُمْ فِي ضَلَالٍ مُّبِينٍ
(அதற்கு) அவர், "நிச்சயமாக நீங்களும், உங்களுடைய மூதாதையவரும் - பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள் என்று கூறினர். (21:54)
قَالُوا أَجِئْتَنَا بِالْحَقِّ أَمْ أَنتَ مِنَ اللَّاعِبِينَ
(அதற்கு) அவர்கள் "நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்திருக்கிறீரா? அல்லது விளையாடுபவர்களில் ஒருவராக இருக்கின்றீரா?" என்று கேட்டார்கள். (21:55)
قَالَ بَل رَّبُّكُمْ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ الَّذِي فَطَرَهُنَّ وَأَنَا عَلَى ذَلِكُم مِّنَ الشَّاهِدِينَ
"அப்படியல்ல. உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்" என்று (இப்ராஹீம்) கூறினார். (21:56)
وَتَاللَّهِ لَأَكِيدَنَّ أَصْنَامَكُم بَعْدَ أَن تُوَلُّوا مُدْبِرِينَ
"இன்னும்; நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்!" (என்றும் கூறினார்.) (21:57)
فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَّهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ
அவ்வாறே அவர், அவற்றில் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார்; அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டு விட்டார்). (21:58)
قَالُوا مَن فَعَلَ هَذَا بِآلِهَتِنَا إِنَّهُ لَمِنَ الظَّالِمِينَ
"எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? நிச்சயமாக அவன் அக்கிரமக்காரர்களில் ஒருவனாக இருப்பான்" என்று கூறினார்கள். (21:59)
قَالُوا سَمِعْنَا فَتًى يَذْكُرُهُمْ يُقَالُ لَهُ إِبْرَاهِيمُ
அதற்கு (அவர்களில் சிலர்) "இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்றாஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது" என்று கூறினார்கள். (21:60)
قَالُوا فَأْتُوا بِهِ عَلَى أَعْيُنِ النَّاسِ لَعَلَّهُمْ يَشْهَدُونَ
"அப்படியானால் அவரை மக்கள் கண் முன்னே கொண்டு வாருங்கள்; அவர்கள் சாட்சியம் கூறும் பொருட்டு" என்று சொன்னார்கள். (21:61)
قَالُوا أَأَنتَ فَعَلْتَ هَذَا بِآلِهَتِنَا يَا إِبْرَاهِيمُ
"இப்றாஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ?" என்று (அவர் வந்ததும்) கேட்டனர். (21:62)
قَالَ بَلْ فَعَلَهُ كَبِيرُهُمْ هَذَا فَاسْأَلُوهُمْ إِن كَانُوا يَنطِقُونَ
அதற்கு அவர் "அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இது தான் செய்திருக்கும்; எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள்" என்று கூறினார். (21:63)
فَرَجَعُوا إِلَى أَنفُسِهِمْ فَقَالُوا إِنَّكُمْ أَنتُمُ الظَّالِمُونَ
(இதற்கு பதில் கூறத் தெரியாத) அவர்கள் தங்களுக்குள் திரும்பி, (ஒருவருக்கொருவர்) "நிச்சயமாக நீங்கள் தாம் (இவற்றை தெய்வங்களாக நம்பி) அநியாயம் செய்து விட்டீர்கள்" என்று பேசிக் கொண்டார்கள். (21:64)
ثُمَّ نُكِسُوا عَلَى رُؤُوسِهِمْ لَقَدْ عَلِمْتَ مَا هَؤُلَاء يَنطِقُونَ
பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; "இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!" (என்று கூறினர்). (21:65)
قَالَ أَفَتَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُكُمْ شَيْئًا وَلَا يَضُرُّكُمْ
"(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்" என்று கேட்டார். (21:66)
أُفٍّ لَّكُمْ وَلِمَا تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ أَفَلَا تَعْقِلُونَ
"சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?" (என்று இப்ராஹீம் கூறினார்). (21:67)
قَالُوا حَرِّقُوهُ وَانصُرُوا آلِهَتَكُمْ إِن كُنتُمْ فَاعِلِينَ
(இதற்கு) அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள்; (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்" என்று கூறினார்கள். (21:68)
قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ
(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) "நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!" என்று நாம் கூறினோம். (21:69)
وَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَخْسَرِينَ
மேலும், அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்! (21:70)