Friday, January 25, 2008

அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் அனைத்து பொருட்கள் மீதும் வல்லமையாளன்!

2:258. அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனீத்தீரா? இப்ராஹீம் கூறினார்: "எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு (இறைவன்)" என்று: அதற்கவன், "நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும்படியும் செய்கிறேன்" என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: "திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!" என்று; (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.

2:259. அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாக சென்றவரைப் போல் - (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து விழுந்து) பாழடைந்து கிடந்தன; (இதைப் பார்த்த அவர்) "இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?" என்று (வியந்து) கூறினார்; ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழும்படிச் செய்து, "எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?" என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், "ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்" என்று கூறினார்; "இல்லை! நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும், உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எவ்விதத்திலும் மாறுதலடையவில்லை; ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரிக்கச் செய்து உயிர் பெறச்) செய்கிறோம்; இன்னும் (அக்கழுதையின்) எழும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படி சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின் மேல் சதையைப் போர்த்துகிறோம்" எனக் கூறி (அதனை உயிர் பெறச் செய்தான் - இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது: அவர் " நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்" என்று கூறினார்.

2:260. இன்னும், இப்ராஹீம்: "என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!" எனக் கோரிய போது, அவன், "நீர் (இதை) நம்பவில்லையா?" எனக் கேட்டான்; மெய்(யாக நம்புகிறேன்)! ஆனால் என் இதயம் அமைதி பெரும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)" என்று கூறினார்; (அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக் கொள்ளும்; பின்னர் (அவற்றை அறுத்து) அவற்றின் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்து விடும்; பின், அவற்றை கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து )வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்" என்று (அல்லாஹ்) கூறினான்.

அல் குர்ஆன்: அல் பகரா (பசு மாடு)