Friday, December 14, 2007

வேதத்தை உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்வீராக!

(நபியே!) உம் இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை (உள்ளது உள்ளபடி) எடுத்துச் சொல்வீராக! அவனுடைய வசனங்களை மாற்றுவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை. மேலும், (யாருக்கு வேண்டியாவது அவற்றை நீர் மாற்றினால்) அல்லாஹ்விடமிருந்து தப்பியோடுவதற்கு எந்தப் புகலிடமும் உமக்குக் கிடைக்காது. (18:27)

எவர்கள் தம்முடைய இறைவனின் திருப்தியை நாடி காலையிலும் மாலையிலும் அவனை அழைக்கிறார்களோ, அவர்களுடன் சேர்ந்து இருப்பதில் உமது மனதைத் திருப்தி கொள்ளச் செய்வீராக! ஒருபோதும் உமது பார்வையை அவர்களை விட்டுத் திருப்ப வேண்டாம். உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நீர் விரும்புகிறீரா என்ன? நம்மை நினைவு கூர்வதை விட்டும் எவனது இதயத்தை நாம் அலட்சியம் கொள்ளச் செய்துள்ளோமோ -- எவன் தன் இச்சைப்படி வாழும் நடத்தையை மேற்கொண்டிருக்கிறானோ -- எவன் தன் செயல் முறைகளில் வரம்பு மீறிச் சென்று கொண்டிருக்கிறானோ அவனுக்கு நீர் கீழ்படியாதீர்! (18:28)

தெளிவாக கூறிவிடும்: இது உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும். இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கைக் கொள்ளட்டும்; நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்! (நிராகரிக்கக்கூடிய) கொடுமையாளர்களுக்குத் திண்ணமாக நாம் ஒரு நெருப்பைத் தயார் செய்து வைத்திருக்கிறோம். அதன் சுவாலைகள் அவர்களைச் சுற்றி வளைத்தாகி விட்டன. அங்கு அவர்கள் தண்ணீர் கேட்பார்களாயின், உருக்கிய உலோகம் போன்ற நீர் அவர்களுக்குக் கொடுக்கப்படும். அது அவர்களின் முகங்களைக் கரித்துவிடும். அது மிகவும் கேடுகெட்ட பானம் ஆகும். மேலும், அவர்களின் ஓய்விடம் மிகவும் தீயதாகும். (18:29)

இறைநம்பிக்கைக் கொண்டு நற்செயகள் புரிகின்றவர்களோ -- திண்ணமாக, நாம் நற்செயல் புரிவோரின் கூலியை வீணாக்குவதில்லை! (18:30)

அவர்களுக்கு நிலையான சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்களுக்குத் தங்க காப்புகள் அணிவிக்கப்படும். மேலும், மெல்லிய மற்றும் அழுத்தமான பச்சைநிறப் பட்டாடைகளையும் அணிவார்கள். மேலும், உயர்ந்த மஞ்சங்கள் மீது சாய்ந்து இருப்பார்கள். இது மிகச்சிறந்த நற்கூலியும், மிக உயர்ந்த தங்குமிடமுமாகும். (18:31)