35:16. அவன் நாடினால், உங்களைப் போக்கி விட்டு, (வேறொரு) புதிய படைப்பைக் கொண்டு வருவான்.
35:17. இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல.
35:18. (மறுமை - நாளில் தன்) சுமையைச் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; அன்றியும் பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அழைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் - அதில் சிறிதளவு கூட அவ்வாறு சுமந்துக் கொள்ளப்படாது; எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர். எவர் பரிசுத்தமாயிருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கின்றார்; அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்ல வேண்டியுள்ளது.
35:19. குருடனும், பார்வையுடையவனும் சமமாகமாட்டார்கள்.
35;20. (அவ்வாறே) இருளும், ஒளியும் (சமமாகா).
35:21. (அவ்வாறே) நிழலும், வெயிலும் (சமமாகா).
35:22. அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், கப்ருகளில் (மண்ணறைகளில்) உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.
35:23. நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறு அல்லர்.
35:24. நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை.
35:25. இன்னும் அவர்கள் உம்மை பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாக பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளி வீசும் வேதத்துடனும் வந்திருந்தார்கள்.
35:26. பின்னர், நிராகரித்த அவர்களை நான் பிடித்துக் கொண்டேன். ஆகவே (அவர்களுக்குரிய) எனது வேதனை எவ்வாறிருந்தது.
அல் குர்ஆன்: அல் ஃபா(த்)திர் (படைப்பவன்).