Friday, August 10, 2007

கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் தர்மத்தை விட மேலானவையாகும்.

2:261. அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான். இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன் யாவற்றையும் நன்கறிபவன்.


2: 262. அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லி காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குறிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு. இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை. அவர்கள் துக்கமும் அடைய மாட்டார்கள்.


2:263. கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் ஸதக்காவை (தர்மத்தை) விட மேலானவையாகும். தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன். மிக்க பொறுமையாளன்.


2:264. நம்பிக்கை கொண்டோர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்தைச் சொல்லி காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள். அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது, ஒரு வழுக்குப் பாறையாகும். அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது, அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது. இவ்வாறே அவர்கள் செய்த(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள். இன்னும் அல்லாஹ் காஃபிரான (நிராகரிப்பவரை) மக்களை நேர்வழியில் செலுத்துவதில்லை.


2:265. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது, உயரமுள்ள (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் மேல் பெருமழை பெய்கிறது. அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது. இன்னும் அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடிமழையே அதற்குப் போதுமானது. அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்.


2:266. உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரிச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கின்றது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்து விடுகிறது. அவருக்கு (வலுவில்லாத) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாமபலாக்கி) விடுகிறது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்.


2:267. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற) வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தருமங்களில்) செலவு செய்யுங்கள். அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தருமங்களில்) செலவழிக்க நாடாதீர்கள். ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண்மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்.


அல்குர்ஆன்: அல்பகரா