அவன் மனிதனை இந்தியத் துளியினால் படைத்தான்; அப்படியிருந்தும் மனிதன் பகிரங்கமானஎதிரியாக இருக்கிறான்.
கால் நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ளஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள்.
அவற்றை நீங்கள் மாலை நேரத்தில் (வீட்டுக்குத்) திரும்பி ஓட்டி வரும் போதும், காலைநேரத்தில் (மேய்ச்சலுக்காக) அவிழ்த்து விடும் போதும், அவற்றில் உங்களுக்கு(ப் பொழிவும்)அழகுமிருக்கிறது.
மேலும், மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன - நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன்.
இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.
இன்னும் நேர் வழிகாட்டுதல் அல்லாஹ்வின் மீதே இருக்கிறது; (அவனருளை அடைய முடியாத) தவறான (பாதைகளும்) இருக்கின்றன; மேலும், அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் நிச்சயமாக நேர்வழியில் சேர்த்து விடுவான்.
அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களூக்கு அருந்தும் நீரும் இருக்கிறது; அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன.
அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவம் (ஜைத்தூன்) மரத்தையும், பேரித்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் - நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது.
இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப்படியே வசப்படுத்தப்பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.
இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள் பறவைகள் போன்ற)வையுமாகும்; நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருட்கொடைகளை நன்றியுடன்)நினவு கூறும் மக்களுக்கு(த் தக்க)அத்தாட்சியுள்ளது.
நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும்,நீங்கள் அணிந்து கொள்ளக் கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும்அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரை பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்கு சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான்.
உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளைநிறுத்தினான்;இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும், பாதைகளையும் (அமைத்தான்)
(வழிகாட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்)நட்சத்திரங்களைக் கொண்டும் (பிரயாணிகளாகிய) அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள்.
(அனைத்தையும்) படைக்கிறானே அவன், (எதையுமே) படைக்காத) (நீங்கள் வணங்குப)வைபோலாவானா? நீங்கள் (இதையேனும்) சிந்திக்க வேண்டாமா?
இன்னும் அல்லாஹ்வின் அரு(ட்கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால் அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்கமன்னிப்பவனாகவும், மிகக் கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
அன்றியும், அல்லாஹ் நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் அறிகிறான்.
அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ. அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள்.
அவர்கள் இறந்தவர்களே - உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்போழுது எழுப்பப்படுவார்கள்என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்.
அல் குர்ஆன்: அத்தியாயம் 16, வசனம் 3 லிருந்து 21 வரை.