(மானிடர்களே!) உங்கள் இறைவன் எப்படிபட்டவன் என்றால் அவனுடைய அருட்கொடைகளை நீங்கள் தேடிச்(சம்பாதித்து)க் கொள்ளும் பொருட்டு கப்பலை அவனே கடலில் செலுத்துகிறான்; நிச்சயமாக அவன் உங்கள் மீது மிக்க கிருபையுடையவனாக இருக்கிறான்.
இன்னும், கடலில் உங்களை ஏதேனும் தங்கடம் (துன்பம்) தீண்டினால் அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவை யாவும் மறைந்து விடும். எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனை) புறக்கணித்து விடுகிறீர்கள் - இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கிறான்.
(கரை சேர்ந்த) பின் அவன் உங்களைப் பூமியின் ஒரு புறத்தில் புதையும்படி செய்து விட மாட்டான் என்றோ, அல்லது உங்கள் மீது கல்மாரியை அனுப்பமாட்டான் என்றோ அச்சந் தீர்ந்து இருக்கிறீர்களா? பின்னர் நீங்கள் உங்களைப் பாதுகாப்போர் எவரையும் காணமாட்டீர்கள்.
அல்லது, அவன் மீண்டும் ஒரு தடவை அக்கடலில் மீளச் செய்து, (எல்லாவற்றையும்) முறித்துத் தள்ளும் புயல் காற்றை உங்கள் மீதனுப்பி, நீங்கள் நிராகரித்ததற்காக உங்களை மூழ்கடித்து விட மாட்டான் என்றும் அச்சந்தீர்ந்து இருக்கிறீர்களா? (அப்படி நேர்ந்தால் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் என) நம்மைத் தொடர்ந்து உங்களுக்காக(க் கேட்போர்) எவரையும் காண மாட்டீர்கள்.
நிச்சயமாக ஆதமுடைய சந்ததியை கண்ணியப் படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட, அவர்களை (தகுதியால்) மேன்மைப்படுத்தினோம்.
அல் குர்ஆன்: அத்தியாயம்-17, வசனம்- 66 முதல் 70 வரை.