Tuesday, February 14, 2006

சத்தியமும் அசத்தியமும்

13:16. (நபியே அவர்களிடம்:) "வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?" என்று நீர் கேளும். அவன் அல்லாஹ் தான் என்று நீரே கூறும்: "(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும், தீமையும் செய்துக் கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்." மேலும் கூறும்: குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்." (அவ்வாறில்லையே; எனவே, நபியே! நீர் உறுதியாகக்) கூறும்: "அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்" என்று.

13:17. அவன் தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன; அவ்வெள்ளம் நுரையை மேலே சுமந்து செல்கிறது; (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் அதைப் போல் நுரை உண்டாகின்றது; இவ்வாறு சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான்; அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்து போய் விடுகிறது; ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது; இவ்வாறே அல்லாஹ் உவமைகளைக் கூறுகிறான்.

13:18. எவர் தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும்; இன்னும் எவர் அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ளவில்லையோ, அவர்களுக்கு பூமியிலுள்ள பொருட்கள் யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப்போன்ற (இன்னொரு) பாகமும் இருந்து (மறுமையின் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) அவற்றையெல்லாம் மீட்டுப் பொருளாகக் கொடுத்துவிடவே விரும்புவார்கள்; (ஆனால் இது பலனை அளிக்காது;) அவர்களுக்குக் கேள்வி கணக்கு மிகவும் கடினமாக இருக்கும்; அவர்கள் தங்கும் இடம் நரகமேயாகும்; அது மிகவும் கெட்ட புகலிட(மும் ஆகு)ம்.

அல் குர்ஆன்: அர் ரஃது (இடியோசை)