30:48 அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியப்படி, வானத்தில் பரத்தி, பல துண்டுகளாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்கிறார்கள்.
30:49 எனினும், அவர்கள் மீது அ(ம் மழையான)து இறங்குவதற்கு முன்னரும் - அதற்கு முன்னரும் - (மழையின்மையால்) அவர்கள் முற்றிலும் நிராசைப்பட்டிருந்தனர்.
30:50 (நபியே!) அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் (இத்தகைய) அத்தாட்சிகளைச் சிந்தித்துப் பார்ப்பீராக! (வரண்டு) மரித்த பிறகு பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான்? (இவ்வாறே) மரித்தவர்களையும் அவன் நிச்சயமாக உயிர்ப்பிப்பவனாக இருக்கிறான்; மேலும் அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.
30:51 ஆனால் (வரண்ட) ஒரு காற்றை நாம் அனுப்பி அத(ன் காரனத்தி)னால் (பயிர்கள் உலர்ந்து) மஞ்சள் நிறமாவதை அவர்கள் பார்த்தால், அதன் பின், (முன்னர் நன்மழை அனுப்பியதற்கு நன்றி மறந்து) நிராகரிப்போராக இருந்து விடுகின்றனர்.
30:52 ஆகவே (நபியே!) மரித்தவர்களையும் நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது; (உம்முடைய அழைப்பைப்) புறக்கணித்துத் திரும்பி விடும் செவிடர்களையும் (உம்முடைய) அழைப்பை நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது.
30:53 இன்னும், குருடர்களையும், அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேர்வழியில் திருப்புபவராகவும் நீர் இல்லை; முற்றிலும் வழிபட்டவர்களாக, நம்முடைய வசனங்களின் மீது ஈமான் கொள்பவர்களைத் தவிர (மற்றெவரையும் உம் அழைப்பைக்) கேட்கச் செய்ய முடியாது.
அல் குர்ஆன்: ஸூரத்துர் ரூம்