70:1. (நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப்போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.
70:2. காஃபிர்களுக்கு (நிராகரிப்பவர்களுக்கு அது ஏற்படும் போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
70:3. (அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).
70:4. ஒருநாள் மலக்குகளும் (ஜிப்ரயீலாகிய - வான தூதர்) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த் தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.
70:5. எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.
70:6. நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.
70:7. ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கின்றோம்.
70:8. வானம் - உருக்கப் பட்ட செம்பைப் போல் ஆகி விடும் நாளில் -
70:9. இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்) -
70:10. (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனைப் பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்க மாட்டான்.
70:11. அவர்கள் நேர்க்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்(தீர்ப்பு) நாளில் வேதனைக்கு ஈடாக குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்-
70:12. தன் மனைவியையும், தன் சகோதரனையும்-
70:13. அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-
70:14. இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் (பிரியப்படுவான்).
70:15. அவ்வாறு (ஆவது) இல்லை; ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமான)து கொழுந்து விட்டு எரியும் நெருப்பாகும்.
70:16. அது (சிரசுத்) தோல்களைக் (எரித்து) கழற்றி விடும்.
70:17. (நேர்வழியை) புறக்கனித்துப் புறங்காட்டி சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.
70:18. அன்றியும் பொருளைச் சேகரித்து பிறகு (அதைத் தக்கப்படி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே )அவனையும் அது அழைக்கும்.
70:19. நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.
70:20. அவனை ஒரு கெடுதி தொட்டு விட்டால் பதறுகிறான்;
70:21. ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக் கொள்கிறான்.
அல் குர்ஆன்: அல் மஆரிஜ் (உயர் வழிகள்)