அந்தி நேரத்துச் செவ்வானத்தின் மீதும், இரவின் மீதும், மேலும், அது ஒன்று திரட்டி வைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும் மேலும், முழுமையாய் மலர்ந்து விடும் சந்திரன் மீதும் நான் சத்தியம் செய்கிறேன். திண்ணமாக, நீங்கள் படிப்படியாய் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு கடந்து செல்ல வேண்டியுள்ளது.* பிறகு, இம்மக்களுக்கு என்ன நேர்ந்தது? நம்பிக்கை கொள்ளாமல் இருக்கிறார்களே! மேலும், இவர்கள் முன்னால் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், இவர்கள் ஸஜ்தா (சிர வணக்கம்) செய்வதுமில்லையே! மாறாக, இந்த நிராகரிப்பாளர்களோ பொய்யெனத் தூற்றுகிறார்கள். உண்மையில், இவர்கள் (தம் வினைச் சுவடிகளில்) சேர்த்துக் கொண்டிருப்பவற்றை அல்லாஹ் நன்கறிகிறான்.** எனவே, இவர்களுக்கு துன்புறுத்தும் வேதனைக்கான 'நற்செய்தியை' அறிவித்து விடுவீராக! ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாகவும் நற்செயல்கள் செய்தவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு என்றென்றும் முடிவுறாத கூலி இருக்கிறது. அல் குர்ஆன் (84:16-25)
*அதாவது நீங்கள் ஒரே நிலையில் இருக்கப் போவதில்லை. மாறாக இளமையிலிருந்து முதுமை, முதுமையிலிருந்து மரணம், மரணத்திலிருந்து 'பர்ஸக்' என்னும் மண்ணறை வாழ்க்கை, பர்ஸகிலிருந்து மறுவாழ்வு, மறுவாழ்விலிருந்து 'மஹஷர்' (எல்லோரும் ஒரே திடலில் ஒன்று திரட்டப்படும்) மைதானம். பிறகு கேள்வி கணக்குக் கொடுப்பதும், செயலேடு பெறுவதும், பிறகு நற்கூலியோ தண்டனையோ பெறுதல் ஆகிய பல கட்டங்களை அவசியம் நீங்கள் கடந்தாக வேண்டியுள்ளது. இது தொடர்பாக மூன்று விஷயங்கள் மீது ஆணையிட்டுக் கூறப்பட்டுள்ளது. ஒன்று: சூரியன் மறைந்த பின்னால் தோன்றும் அந்தி வானத்தின் சிவப்பு; இரண்டு: பகலுக்குப் பின்னர் வருகின்ற இரவின் இருள்; பகலில் பூமியில் பரவிக் கிடக்கும் மனிதர்களும், பிராணிகளும் இரவில் ஒன்று திரண்டு வருவது; மூன்று: சந்திரன், இளம் பிறையிலிருந்து படிப்படியாக வளர்ந்து பௌர்ணமியாய்த் தோற்றமளித்தல். இந்த விஷயங்கள் ஒரு பேருண்மைக்கு பகிரங்கமாய்ச் சான்று பகர்ந்து கொண்டிருப்பதைப் போல் இருக்கின்றன. அந்தப் பேருண்மை இதுதான்: 'மனிதன் வசிக்கின்ற இந்த பிரபஞ்சத்தில் எங்குமே தேக்கநிலை காணப்படவில்லை; தொடர்படியான மாறுதலும், படிப்படியான மாற்றமும் தான் எத்திசையிலும் காணப்படுகின்றன. எனவே மனிதன் மரணம் அடைந்தவுடன் எல்லாம் முடிவடைந்து விடுகிறது' என்ற இறை நிராகரிப்பாளர்களின் எண்ணம் சரியானதன்று.
**இதற்கு இன்னொரு கருத்து இப்படியும் இருக்கலாம். தம் நெஞ்சங்களில் அவர்கள் நிரப்பி வைத்துள்ள மாசுகளான இறைநிராகரிப்பு, முரண்டு, சத்தியத்தைப் பகைத்தல், தீய நாட்டங்கள், கெட்ட எண்ணங்கள் ஆகிய அனைத்தையும் இறைவன் அறிகிறான்.