Wednesday, December 08, 2004

நன்மை புரிபவரின் பிரதிபலன்!

13:19. உம் இறைவனால் உம்மீது நிச்சயமாக இறப்பட்ட(வேதத்)தை உண்மையென அறிகிறவர் குருடராக இருப்பவரைப் போலாவாரா? நிச்சயமாக (இவ்வேதத்தின் மூலம்) அறிவுடையவர்கள் தான் நல்லுபதேசம் பெறுவார்கள்.

13:20. அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவார்கள்; இன்னும், (தாம் செய்த) உடன் படிக்கையை முறித்து விடவும் மாட்டார்கள்.

13:21. மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் எது சேர்த்து வைக்கப்படப் வேண்டும் எனக் கட்டளையிட்டானோ, அதைச் சேர்த்து வைப்பார்கள்; இன்னும், அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுவார்கள்; மேலும், (மறுமை - தீர்ப்பு நாளின்) கடுமையான கேள்விக் கணக்கைக் குறித்தும் பயப்படுவார்கள்.

13:22. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; தொழுகையையும் (வணக்கத்தையும்) நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில் - தீர்ப்பு நாளில் (சுவனபதியென்னும்) நல்ல வீடு இருக்கிறது.

13:23. நிலையான (அந்த) சுவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள்; மலக்குகள் - வான தூதர்கள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள்.

13:24. "நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தற்காக 'ஸலாமுன் அலைக்கும்' (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!) உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று!" (என்று கூறுவார்கள்,)

13:25. எவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உறுதிபடுத்திய பின்னர் முறித்து விடுகிறார்களோ; இன்னும் அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ; பூமியில் ஃபஸாது (விஷமம்) செய்கிறார்களோ - அத்தகையோருக்குச் சாபந்தான்; இன்னும், அவர்களுக்கு மிகக்கெட்ட வீடும் இருக்கிறது.

13:26. அல்லாஹ் தான் நாடியவர்க்கு சம்பத்தை விசாலமாக்குகின்றான்; (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான்; எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் - இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு (மறு உலக வாழ்க்கைக்கு) ஒப்பிட்டால் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை.

அல் குர்ஆன்: அர் ரஃது (இடியோசை)