Showing posts with label நிராகரிப்பு. Show all posts
Showing posts with label நிராகரிப்பு. Show all posts

Friday, May 29, 2009

அல்லாஹ் தன் அடியார்களை எச்சரிக்கும் நரக நெருப்பு.

9:63. எவர் அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் விரோதம் செய்கின்றாரோ நிச்சயமாக அவருக்குத்தான் நரக நெருப்பு இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொள்ளவிலலையா? அவர் அதில் என்றென்றும் தங்கியிருப்பார் - இது பெரும் இழிவாகும்.

9:81. (தபூக் போரில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாக(த் தம் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்; அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிவதையும் வெறுத்து (மற்றவர்களை நோக்கி); "இந்த வெப்ப (கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்" என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் "நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் விளங்கியிருந்தால் (பின் தங்கியிருக்க மாட்டார்கள்).

10:27. ஆனால் தீமையைச் சம்பாதிப்பவர்களுக்கு, (அவர்கள் செய்த) தீமைக்குக் கூலியாக அதுபோன்ற தீமையாகும்! அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும்; அவர்களை அல்லாஹ்வின் (தண்டனையை) விட்டுக் காப்பாற்றுபவர் எவருமிலர்; இருண்ட இருளையுடைய இரவின் ஒருபாகம் அவர்கள் முகங்களைச் சூழ்ந்து சுற்றிக் கொள்ளப்பட்டது போல் (அவர்களின்) முகங்கள் காணப்படும். அவர்கள் நரக நெருப்புக்கு உரியவர்கள். அவர்கள் அங்கேயே என்றென்றும் இருப்பார்கள்.

11:113. இன்னும், யார் அநியாயம் செய்கிறார்களோ அவர்களின் பக்கம் நீங்கள் சாய்ந்து விடாதீர்கள் - அப்படிச் செய்தால் நரக நெருப்பு உங்களைப் பிடித்துக்கொள்ளும்; அல்லாஹ்வை அன்றி உங்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை; மேலும் (நீங்கள் அவனுக்கெதிராக வேறெவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டீர்கள்.

17:97. அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ(த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்; மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் தம் முகங்களில் குப்புற வரும்படி செய்து கியாம நாளில் ஒன்று சேர்ப்போம்; இன்னும் அவர்கள் ஒதுங்கும் இடம் நரகமேயாகும்; (நரக நெருப்பு). அணையும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக்குவோம்.

35:36. எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது. அவர்கள் மரித்துப் போகும்படியாக அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது அன்றியும் அந்(நரகத்)திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது. இவ்வாறே காஃபிர் ஒவ்வொருவருக்கும் நாம் கூலிகொடுப்போம்.

54:48. அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், "நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று அவர்களுக்கு கூறப்படும்).

59:17. அவ்விருவரின் முடிவு, நிச்சயமாக அவர்கள் என்றென்றும் தங்கும் நரக நெருப்புத்தான், அநியாயக் காரர்களின் கூலி இதுவேயாகும்.

72:23. "அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பர்" என (நபியே!) நீர் கூறும்.

Friday, March 14, 2008

முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தும் குர்ஆனை நம்புங்கள்!

2:176. நிச்சயமாக அல்லாஹ் இவ்வேதத்தை உண்மையுடன் அருள் செய்தான்; நிச்சயமாக இன்னும் இவ்வேதத்தில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர்.

4:46. யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்; (இன்னும் உம்மை நோக்கி, 'நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்; இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!' என்று கூறி, 'ராயினா' என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்; (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் 'நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிபட்டோம்;' (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்; எங்களை அன்போடு கவனியுங்கள் (உன்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும் மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும் - ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களை சபித்து விட்டான்; ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.

4:47. வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பி விடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) 'அஸ்ஹாபுஸ் ஸப்து' என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப்பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்; அல்லாஹ்வின் கட்டளை நிறைவேற்றப்பட்டே தீரும்.

6:39. நம்முடைய வசனங்களைப் பொய்ப்பிப்பவர்கள் (குஃப்ரு என்னும்) இருள்களில் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர்; அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டு விடுகிறான்; இன்னும் அவன் நாடியவரை நேர்வழியில் செலுத்துகின்றான்.

16:105. நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்.

25:30. 'என்னுடைய இறைவா! நிச்சயமாக என்னுடைய சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கி விட்டார்கள்' என்று (நம்) தூதர் கூறுவார்.

25:31. மேலும், இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளிலிருந்து பகைவரை உண்டாக்கினோம்; இன்னும், உம்முடைய இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டியாகவும் உதவி புரிபவனாகவும் இருக்கப் போதுமானவன்.

25:32. இன்னும்: 'இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை' என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம்.

25:33. அவர்கள் உம்மிடம் எவ்விதமான உவமானத்தைக் கொண்டு வந்தாலும் (அதை விடவும்) உண்மையானதும், அழகானதுமான ஒரு விளக்கத்தை நாம் உமக்குக் கொடுக்காமல் இல்லை.

25:34. எவர்கள் நரகத்திற்குத் தங்கள் முகம் குப்புற (இழுத்துச் செல்லப் பெற்று) ஒன்று சேர்க்கப் படுவார்களோ, அவர்கள் தங்குமிடத்தால் மிகவும் கெட்டவர்கள்; பாதையால் பெரிதும் வழிகெட்டவர்கள்.

86:21. (நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.

86:22. (எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூலில் - பதிவாகி பாதுகாக்கப்பட்டதாக இருக்கிறது.