Monday, April 01, 2013

எந்த ஓர் ஆத்மாவும் அணுவளவுகூட அநியாயத்தை காணாத இறுதித் தீர்ப்புநாள்!

தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள். அன்று நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள். பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும். மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா. (அல்குர்ஆன்: 2:281)

சந்தேகமில்லாத அந்த (இறுதி) நாளில் அவர்களையெல்லாம் நாம் ஒன்று சேர்த்து ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கு உரியதை முழுமையாகக் கொடுக்கப்படும்போது (அவர்களுடைய நிலை) எப்படியிருக்கும்? அவர்கள் (தம் வினைகளுக்குரிய பலன் பெருவதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்: 3:25)
  
எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்: 3:161)

(நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவதுபோல்) அல்ல! அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன்: 4:49)

ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள். இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்: 4:124)

எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு. எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 6:160)
 
ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாம் அனுப்பிய இறை) தூதர் உண்டு. அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன்: 10:47)

(அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும். தன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும். ஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும் - (ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன்: 10:54)

ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்நாளில், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்(து வந்)ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 16:111)

(நபியே!) நாம் எல்லா மக்களையும் அவரவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக. அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகைய நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள். இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்: 17:71)

இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது. மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும். (அல்குர்ஆன்: 21:47)

நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம். மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்) புத்தகம் நம்மிடம் இருக்கிறது. இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன்: 23:62)

அன்றியும், அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது. இன்னும், நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன்: 36:54)

மேலும், பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்; (அவர்களுடைய) குறிப்பேடு (அவர்கள் முன்) வைக்கப்படும். இன்னும், நபிமார்களும், சாட்சிகளும் கொண்டுவரப்படுவார்கள். அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்: 39:69)

வானங்களையும் பூமியையும் அல்லாஹ் உண்மையுடன் (தக்க காரணத்தைக் கொண்டே) படைத்துள்ளான். ஒவ்வோர் ஆத்மாவும் அது தேடிக் கொண்டதற்குத் தக்க கூலி கொடுக்கப்படுவதற்காக. அவை அநியாயம் செய்யப்படமாட்டா. (அல்குர்ஆன்: 45:22)