Friday, April 05, 2013

மனிதன் திருந்தி நேர்வழி பெறுவதற்காக நினைவூட்டும் நல்லுபதேசம்!

"மூஸாவே! உம் சமூகத்தாரை விட்டு உம்மை இவ்வளவு சீக்கிரம் விரைந்து வரச்செய்தது யாது?" (என்று தூர் ஸினாய் மலைக்கு அவர் வந்த போது அல்லாஹ் கேட்டான்.) (அல்குர்ஆன்: 20:83)

(அதற்கவர்) "அவர்களும் என் அடிச்சுவட்டின் மீதே வருகின்றனர்; இன்னும் (என்) இறைவனே! நீ என்னைப் பற்றித் திருப்திப் படுவதற்காக, நான் உன்னிடத்தில் விரைந்து வந்தேன்" என்று கூறினார். (அல்குர்ஆன்: 20:84)

"நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை 'ஸாமிரி' வழிகெடுத்து விட்டான்" என்று (அல்லாஹ்) கூறினான். (அல்குர்ஆன்: 20:85)

ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து "என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகி விட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?" (என்றார்). (அல்குர்ஆன்: 20:86)

"உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்" என்று அவர்கள் கூறினார்கள். (அல்குர்ஆன்: 20:87)

பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் "இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்" என்று சொன்னான். (அல்குர்ஆன்: 20:88)

அவர்களுக்கு அது மறுபடி எதுவும் சொல்லவில்லை என்பதையும்; அவர்களுக்காக நன்மையையோ, தீமையையோ செய்யச் சக்தியற்றது என்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா? (அல்குர்ஆன்: 20:89)

இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, "என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக உங்களுடைய இறைவன் 'அர்ரஹ்மானே' ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்" என்று கூறினார். (அல்குர்ஆன்: 20:90)

"மூஸா எங்களிடம் திரும்பி வரும் வரையில், நாங்கள் இதன் ஆராதனையை நிறுத்த மாட்டோம்" என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன்: 20:91)

(மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) "ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார். (அல்குர்ஆன்: 20:92)

"நீங்கள் என்னைப் பின்பற்றியிருக்க வேண்டாமா? (அவ்வாறு செய்வதை என்ன தடுத்தது?) நீங்கள் என் கட்டளையை மீறினீர்களா?" (அல்குர்ஆன்: 20:93)

(இதற்கு ஹாரூன்;) "என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; 'பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!' என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்" என்று கூறினார். (அல்குர்ஆன்: 20:94)

"ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?" என்று மூஸா அவனிடம் கேட்டார். (அல்குர்ஆன்: 20:95)

"அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று" என (ஸாமிரீ பதில்) சொன்னான். (அல்குர்ஆன்: 20:96)

"நீ இங்கிருந்து போய் விடு நிச்சயமாக இந்த வாழ்க்கையில் (எவரைக் கண்டாலும், என்னைத்) "தீண்டாதீர்கள்" என்று சொல்(லித் திரி)வது தான் உனக்குள்ளது, (மறுமையில்) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையும் உண்டு. அதை விட்டும் நீ தப்பமாட்டாய்; மேலும்; நீ தரிபட்டு ஆராதனை செய்து கொண்டிருந்தாயே அந்த "நாயனைப்" பார்; நிச்சயமாக அதனைச் சுட்டெரித்துப் பின்னர் (சாம்பலாக்கி) அதைக் கடலில் பரத்தி விடுவோம்" என்றார். (அல்குர்ஆன்: 20:97)

"உங்களுடைய நாயன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை எல்லாப் பொருட்களிலும் ஞானத்தால் விசாலமானவன்" என்றும் கூறினார். (அல்குர்ஆன்: 20:98)

(நபியே!) இவ்வாறே முன் சென்று போனவர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்; மேலும் திட்டமாக நம்மிடமிருந்து நினைவூட்டும் நல்லுபதேசத்தை (இத்திருக் குர்ஆனை) நாம் உமக்குக் கொடுத்திருக்கிறோம். (அல்குர்ஆன்: 20:99)

Monday, April 01, 2013

எந்த ஓர் ஆத்மாவும் அணுவளவுகூட அநியாயத்தை காணாத இறுதித் தீர்ப்புநாள்!

தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள். அன்று நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள். பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும். மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா. (அல்குர்ஆன்: 2:281)

சந்தேகமில்லாத அந்த (இறுதி) நாளில் அவர்களையெல்லாம் நாம் ஒன்று சேர்த்து ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கு உரியதை முழுமையாகக் கொடுக்கப்படும்போது (அவர்களுடைய நிலை) எப்படியிருக்கும்? அவர்கள் (தம் வினைகளுக்குரிய பலன் பெருவதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்: 3:25)
  
எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்: 3:161)

(நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவதுபோல்) அல்ல! அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன்: 4:49)

ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள். இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்: 4:124)

எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு. எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 6:160)
 
ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாம் அனுப்பிய இறை) தூதர் உண்டு. அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன்: 10:47)

(அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும். தன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும். ஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும் - (ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன்: 10:54)

ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்நாளில், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்(து வந்)ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 16:111)

(நபியே!) நாம் எல்லா மக்களையும் அவரவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக. அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகைய நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள். இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்: 17:71)

இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது. மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும். (அல்குர்ஆன்: 21:47)

நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம். மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்) புத்தகம் நம்மிடம் இருக்கிறது. இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன்: 23:62)

அன்றியும், அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது. இன்னும், நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன்: 36:54)

மேலும், பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்; (அவர்களுடைய) குறிப்பேடு (அவர்கள் முன்) வைக்கப்படும். இன்னும், நபிமார்களும், சாட்சிகளும் கொண்டுவரப்படுவார்கள். அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்: 39:69)

வானங்களையும் பூமியையும் அல்லாஹ் உண்மையுடன் (தக்க காரணத்தைக் கொண்டே) படைத்துள்ளான். ஒவ்வோர் ஆத்மாவும் அது தேடிக் கொண்டதற்குத் தக்க கூலி கொடுக்கப்படுவதற்காக. அவை அநியாயம் செய்யப்படமாட்டா. (அல்குர்ஆன்: 45:22)

Friday, December 30, 2011

ஏசுநாதருக்கு உண்மையில் இறைமையின் சிறப்பியல்புகள் ஏதேனும் உள்ளதா? இல்லை! இல்லவே இல்லை! கவனியுங்கள் இறுதி இறைவேத வசனங்களை!

5:116. இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே (ஏசு நாதர்) 'அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் (தீர்ப்பு நாளில்) கேட்கும் போது அவர், "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறி இருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றை எல்லாம் நன்கு அறிபவன்" என்று அவர் கூறுவார்.

5:117. "நீ எனக்கு கட்டளை இட்டப்படி (மனிதர்களை நோக்கி), 'என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்' என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களுக்கு கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்" (என்றும்);

5:118. "(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர். அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீதான் (யாவரையும்) மிகைத்தோனாகவும், ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்" (என்றும் கூறுவார்).

5:119. அப்போது அல்லாஹ், " இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும்.

5:120. வானங்களுடையவும், பூமியுனுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனே எல்லாப் பொருட்கள் மீது பேராற்றலுடையோன் ஆவான்.

அல் குர்ஆன்: சூரா அல் மாயிதா (உணவுத் தட்டு)

Friday, December 23, 2011

தங்கள் மார்க்கத்தை வீணாகவும் விளையாட்டாகவும் ஆக்கி, உலக வாழ்வில் மயங்கியோர் பெரும் இழப்புக்குள்ளாகும் நாள்!

சுவர்க்க வாசிகள், நரகவாசிகளை அழைத்து, எங்களுக்கு எங்கள் இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை நிச்சயமாகவும், உறுதியாகவும் பெற்றுக் கொண்டோம். உங்களுக்கு உங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டீர்களா?" என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், "ஆம் (பெற்று கொண்டோம்)" என்பார்கள். அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர், "அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!" என்று அறிவிப்பார்.

(ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் (நேர்) வழியைவிட்டு (மனிதர்களைத்) தடுத்து, அதைக் கோணலாக்கவும் விரும்பினர். மேலும் அவர்கள் இறுதி நாளையையும் (நம்பாது) மறுத்தனர்.

(நரகவாசிகள், சுவர்க்கவாசிகள் ஆகிய) இவர்களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும். அதன் சிகரங்களில் அனேக மனிதர்கள் இருப்பார்கள். (நரகவாசிகள், சுவர்க்கவாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள். அவர்கள் சுவர்க்க வாசிகளை அழைத்து "ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகுக!)" என்று கூறுவார்கள். அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை-அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கிறார்கள்.

அவர்களுடைய பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், அவர்கள், "எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே ஆக்கி விடாதே" என்று கூறுவார்கள்.

சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை-அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு- அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்; "நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!"

"அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் இவர்கள் தானே? (என்று சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள்; உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்" என்றும் கூறுவார்கள்.


நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, "தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்" எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்; நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் (நிராகரிப்பவர்கள்) மீது தடுத்து (ஹராம்-அனுமதியில்லை) விட்டான்" என்றும் கூறுவார்கள்.

(ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்; இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது; எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.

நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்தோம். அதை நாம் பூரண ஞானத்தைக் கொண்டு விளக்கியுள்ளோம்; அது நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.

இவர்கள் ( தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த) இறுதியையன்றி வேறு எதையும் எதிர்பார்க்கிறார்களா? அந்தத் தண்டணை நாள் வந்த போது, இதற்குமுன் அதனை முற்றிலும் மறந்திருந்த இவர்கள், "நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் சத்திய(வேத)த்தையே கொண்டு வந்தனர், எங்களுக்குப் பரிந்து பேசகூடியவர்கள் எவரும் இருக்கின்றனரா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்காகப் பரிந்து பேசட்டும்; அல்லது நாங்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா? அப்படியாயின், நாங்கள் முன் செய்து கொண்டிருந்த(தீய)வற்றை விட்டு வேறு (நன்மைகளையே) செய்வோம்" என்று கூறுவார்கள் - நிச்சயமாக அவர்கள் தமக்கு தாமே இழப்புக்கு ஆளாக்கிக் கொண்டார்கள், அவர்கள் கற்பனை செய்து வந்தவை அவர்களை விட்டும் மறைந்து விடும்.

அல் குர்ஆன்: 7-44 முதல் 53 வரை.

Friday, July 22, 2011

இறைவனின் மிகப்பெரும் படைப்புகளான சந்திரன், சூரியன், நட்சத்திரங்களை வணங்குவது மிகப்பெரும் வழிகேடு!

6:74. இப்ராஹீம் தம் தகப்பனார் ஆஜரிடம், "விக்கிரகங்களையா நீர் தெய்வங்களாக எடுத்துக் கொள்கிறீர்? நான் உம்மையும் உம் சமூகத்தாரையும், பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை நிச்சயமாகப் பார்க்கிறேன்" என்று கூறியதை நினைத்துப்பாரும்.

6:75. அவர் உறுதியான நம்பிக்கையுடையவராய் ஆகும் பொருட்டு வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியை இப்ராஹீமுக்கு இவ்வாறு காண்பித்தோம்.

6:76. ஆகவே அவரை இரவு மூடிக் கொண்ட போது அவர் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தார்; "இதுதான் என் இறைவன்!" என்று கூறினார்; ஆனால் அது மறைந்த போது அவர், "நான் மறையக் கூடியவற்றை நேசிக்க மாட்டேன்" என்று சொன்னார்.

6:77. பின்னர் சந்திரன் (பிரகாசத்துடன்) உதயமாவதைக் கண்டு, அவர், "இதுவே என் இறைவன்" என்று கூறினார். ஆனால் அது மறைந்த போது அவர், "என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான் நிச்சயமாக வழி தவறியவர்கள் கூட்டத்தில் (ஒருவனாக) ஆகிவிடுவேன்" என்று கூறினார்.

6:78. பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்ட போது: "இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது" என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், "என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்" என்று கூறினார்.

6:79. "வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக - (இணைவைப்போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்" (என்று கூறினார்).

6:80. அவருடன் அவருடைய கூட்டத்தார் விவாதித்தார்கள்; அதற்கவர் "அல்லாஹ்வைப் பற்றியா என்னிடம் தர்க்கம் செய்கிறீர்கள்? அவன் நிச்சயமாக எனக்கு நேர்வழி காட்டி விட்டான்; நீங்கள் அவனுக்கு இணையாக்குபவற்றைப் பற்றி நான் பயப்பட மாட்டேன்; என் இறைவன் எதையாவது நாடினாலன்றி (எதுவும் நிகழ்ந்து விடாது); என் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்; இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?" என்று கூறினார்.

6:81. உங்களுக்கு அவன் எந்த அத்தாட்சியும் இறக்கி வைக்காமலிருக்கும்போது நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது பற்றி பயப்படவில்லை - அப்படியிருக்க நீங்கள் (அவனுக்கு) இணைவைப்பவற்றுக்கு நான் எப்படி பயப்படுவேன்? நம் இருபிரிவினரில் அச்சமின்றி இருக்கத்தகுதி உடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், (கூறுங்கள் எனவும் கேட்டார்).

6:82. எவர் ஈமான் (நம்பிக்கை) கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்த வில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியை பெற்றுக் கொண்டவர்கள்.

6:83. இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்ராஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன்.

அல் குர்ஆன்: அல் அன்ஆம்.